- கறம்பக்குடியில் ஆடுகளை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- ஆடுகள் அதன் உரிமையாளரிடம் ஒப்ப டைக்கப்பட்டது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் வயல்களில் மேய்ந்த மற்றும் வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் அடிக்கடி திருட்டு போனது.
இது குறித்து கறம்பக்குடி போலீசில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதன் பேரில் மலையூர் மற்றும் ரெகுநாதபுரம் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகின. இதை அடுத்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆடுகளை ஏற்றிக்கொண்டு 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ் (வயது 24), பாரதிராஜா (21), ஆனந்தன் (20) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும் இவர்கள் கறம்பகுடி பகுதியில் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 17 ஆடுகள் 5 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.
அந்த ஆடுகள் அதன் உரிமையாளரிடம் ஒப்ப டைக்கப்பட்டது மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.