உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-04-17 15:04 IST   |   Update On 2023-04-17 15:04:00 IST
  • கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.
  • கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இது போன்ற தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 14-ந் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அரிவாள் வெட்டு

அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் காயம் அடைந்த குணசேகரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர். மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்த கிராம மக்கள் திடீரென கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்ப தாவது:-

நிரந்தர தீர்வு வேண்டும்

சமீப காலமாக எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு அரசு துறை சார்ந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இது போன்ற தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் 2 நாட்களுக்கு மேலாகியும் போலீசார் கைது செய்யவில்லை. அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மருதம்நகரில் உள்ள டாஸ்மாக் கடையால் தான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த கடையையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அவர்களிடம் பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.

வீட்டு மனை

அம்பை தாலுகா அடைச்சாணி அருந்ததியர் தெருவை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில், ரெங்கசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு எங்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்ட செல்லும் போது அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் பட்டா ரத்தாகி விட்டதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி எங்களது வீட்டுமனையை மீண்டும் பெற்று தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Tags:    

Similar News