ஆரணி சத்ய சாய்பாபா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- கடந்த மாதம் 25-ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.
- போராட்டம் காரணமாக, ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி, சுப்பிரமணிய நகர் பகுதியில் சத்ய சாய்பாபா நகர் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. இந்நிலையில், அதன் அருகே மற்றொரு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்றும் இதனால் சுகாதார சீர்கேடு, உடல் உபாதைகள் உள்ளிட்டவை வரும் என்று கூறி உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த மாதம் 25-ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டு புகார் மனு அளித்தனர். இதனால் அப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் செல்போன் கோபுரம் பணி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனை அறிந்த இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று காலை பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் கலாதரன், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் கௌசல்யா, அருணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் பின்னர், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.செல்போன் கோபுரம் என்பது அனைத்து இடங்களிலும் அமைக்கப்படுகிறது என்று கூறிய அவர்கள், செல்போன் கோபுரங்கள் அமைக்க கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்தும், கலெக்டரிடம் அனுமதி பெறுவது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விளக்கி கூறினார்.
செல்போன் அமைக்கும் பணிக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது, உங்களது ஆட்சேபனையை தெரிவிப்பதாக இருந்தால் கலெக்டரை சந்தித்து புகார் அளியுங்கள் என்றும் அறிவுறுத்தினார். இதனை ஏற்று அப்பகுதி மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்சினையால் சுமார் 2 மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.