உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆகாஷிடம் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் கோரிக்கை மனு வழங்கிய காட்சி.




பங்களா சுரண்டையில் எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2022-12-20 13:45 IST   |   Update On 2022-12-20 13:45:00 IST
  • சுரண்டை நகராட்சி 23-வது வார்டு கீழச்சுரண்டை களம் புறம்போக்கு மேல்புறம் எரிவாயு தகன மேடை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 11-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

சுரண்டை:

சுரண்டை நகராட்சி மன்ற தலைவர் வள்ளி முருகன் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுரண்டை நகராட்சி 23-வது வார்டு கீழச்சுரண்டை களம் புறம்போக்கு மேல்புறம் எரிவாயு தகன மேடை அமைக்க நகர் மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த இடம் பொது மக்களுக்கு எந்த விதத்திலும் அச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாத இடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தங்களிடமிருந்து வரப்பட்ட கடிதம் எரிவாயு தகன மேடை 11-வது வார்டில் அமைக்கும்படி கூறியுள்ளது. அந்த பகுதியில் 100 மீட்டர் தொலைவில் குடியிருப்புகள், சுமார் 2000 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன. எனவே 11-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சுரண்டை நகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 23- வது வார்டு ஆற்றுப்பாலம் தென்புறம் மின்மயான தகனமேடை அமைக்க ஆவண செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.


இந்த நிலையில் சுரண்டை 11-வது வார்டு பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க அடிப்படை பணி தொடங்கப்பட்டதால் பங்களாசுரண்டை பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்

எம்.எல்.ஏ.விடம் சென்று உடனடியாக பங்களா சுரண்டை பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்படாத இடத்தில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.

அவர்களிடம் பழனி நாடார் எம்.எல்.ஏ. உங்கள் பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து சுரண்டை நகர மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் அச்சப்படாத வகையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும் என கூறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News