உள்ளூர் செய்திகள்

கோவையில் மீன், இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

Published On 2023-07-02 09:19 GMT   |   Update On 2023-07-02 09:19 GMT
  • தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கோவை,

தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு இல்லத்தரசிகள் சென்று விட்டனர்.

இதனால் பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளை நோக்கி சென்று விட்டனர். கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.

இன்று காலை வழக்கம் போல உக்கடம் மீன் சந்தை கூடியது. தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த மீன்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அந்த பகுதியே எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். விலா, நெத்திலி, சங்கரா, பாறை என பல்வேறு வகையான மீன்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை காண முடிந்தது.

ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

விளமீன்-ரூ.400, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.270, வாவல்-ரூ.130, நெய்மீன்-ரூ.90, கொல்லி-ரூ.130, அயிரை-ரூ.200, முரள்-ரூ.200, பாறை-ரூ.400, வஞ்சிரம்-ரூ.700, மத்தி-ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.இதேபோல் கோவையில் உள்ள இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். புறநகர் பகுதி களான மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

Tags:    

Similar News