உள்ளூர் செய்திகள்

கோவையில் வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2023-07-04 13:11 IST   |   Update On 2023-07-04 13:11:00 IST
  • கடந்த இரண்டு நாட்களாக மக்னா யானை சரளப்பதி கிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
  • ஒரு வாரத்தில் பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே சுற்றித்திரியும் மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற கோரி, ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்து வந்ததால், கடந்த 5 மாதங்களுக்கு முன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை, பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை, கோவையை அடுத்த மதுக்கரை அருகே வைத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மானாம்பள்ளி அருகே மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அங்கிருந்து டாப்சிலிப் பகுதிக்கு இடம் பெயர்ந்த மக்னா யானை அங்கிருந்து மீண்டும் வெளியேறி சரளப்பதி கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது.

கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்னா யானை, அப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக மக்னா யானை சரளப்பதி கிராமத்துக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், அங்கிருந்த ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலர் செல்வத்திடம், மக்னா யானையை பிடித்து கும்கியாக மாற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

சென்னையில் உள்ள மேல் அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டுமே, மக்னா யானையை பிடிக்க முடியும். தற்போது மக்னா யானை கிராமத்துக்குள் நுழையாமல் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். யானையை பிடிப்பது குறித்து மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கிராமத்தில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா யானையை இன்னும் ஒரு வாரத்துக்குள் பிடிக்காவிட்டால், மூன்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News