உள்ளூர் செய்திகள்

பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு: ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-09-17 14:53 GMT   |   Update On 2022-09-17 14:53 GMT
  • மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
  • விமான நிலையத்துக்காக பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

விமான நிலையத்திற்கு பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் நிலம் எடுப்பதாக தகவல் பரவியது. அதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

53வது நாளான இன்று 600க்கும் மேற்பட்ட மக்கள் ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது .

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஏகனாபுரம் கிராமத்தை நோக்கி வந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கசாவடி அருகே கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருந்தாலும் இந்த உண்ணாவிரதத்தை அமைதியான முறையில் வழிநடத்தி செல்ல இந்த மக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து இந்த கிராம மக்கள் கூறுகையில், பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம். குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் எடுக்கக் கூடாது. அதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு குழு அமைத்து எங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன்வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விமான நிலையம் அமைவதற்கு எங்கள் கிராமத்தை தேர்வு செய்யாமல் மாற்று இடத்தை அரசு முன்வந்து தேர்வு செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.

Tags:    

Similar News