ஆ.ராசா எம்.பி.க்கு எதிராக போராட்டம்- நீலகிரி மாவட்டத்தில் நாளை முழு அடைப்பு
ஊட்டி:
தி.மு.கவின் மூத்த தலைவர் ஆ.ராசா. இவர் நீலகிரி தொகுதியின் எம்.பியாக இருந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா எம்.பி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆ.ராசா எம்.பியின் இந்த கருத்து தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகளையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அவரின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியது.
ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், அவரை எம்.பி. பதவியை விட்டு நீக்க கோரியும் பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கோவையில் நேற்று ஒரே நாளில் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.கவினர் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆ.ராசா எம்.பியின் பேச்சை கண்டித்து அவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை நீலகிரி முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:-
ஆ.ராசாவின் இந்து மத விரோத பேச்சு கண்டிக்கத்தக்கது. அவரை கண்டித்து நாளை நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களின் இந்த போராட்டத்திற்கு நீலகிரி மாவட்ட மக்கள், வியாபாரிகள் என அனைவரும் முழு ஆதரவு கொடுத்துள்ளனர்.திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்.
மேலும் ஆ.ராசாவை எம்பி. பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய கோரி, ஒவ்வொரு இந்து முன்னணியினரும் வருகிற புதன்கிழமையில் இருந்து ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடிதம் எழுத உள்ளோம். 15 நாட்களுக்குள் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும். பல்வேறு விதமாக எங்களது போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி கடையடைப்பு போராட்டம் அறிவித்து உள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக கூடலூர் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை, நாடுகாணி, பர்லியார் உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலுமே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல நீலகிரி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.