குண்டும், குழியுமாக உள்ள சின்னாங்குப்பம் சாலையை படத்தில் காணலாம்.
போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் தவிப்பு-சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு சின்னாங்குப்பம் மருத்துவமனைக்கே செல்ல வேண்டி உள்ளது.
- இவ்வழியாக பேருந்துகள் ஏதும் இயக்கப்படுவதில்லை.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சில்வாடி, பே.தாதம்பட்டி, ஒடசல்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கூக்கடப்பட்டி, புதுார் வழியாக சின்னாங்குப்பம் செல்வதற்கு உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அமைத்து பல வருடங்களாகிய நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது.
இந்த 5 கிராமங்களில் இருந்து தினசரி பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என தினசரி 1000-ற்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.
கிராமப் பகுதிகள் மலைப் பகுதிகளை யொட்டி உள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு சின்னாங்குப்பம் மருத்துவமனைக்கே செல்ல வேண்டி உள்ளது.
பிரசவ நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகவும் சவாலாக உள்ளது. இது தவிர கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் வார சந்தைகளுக்கு செல்ல மக்கள் மற்றும் சின்னாங்குப்பத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவியர்கள் அவதியடைந்து வருகின்றனர். இவ்வழியாக பேருந்துகள் ஏதும் இயக்கப்படுவதில்லை.
இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் பழுதடைந்து பல்வேறு இடங்களில் ஜல்லி பெயர்ந்து, குண்டு குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக புதுப்பித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.