உள்ளூர் செய்திகள்

சூரியனார் கோவில் ஆதீனம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

Published On 2025-04-25 12:23 IST   |   Update On 2025-04-25 12:23:00 IST
  • ஹேமாஸ்ரீ என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டதால் சர்ச்சை.
  • ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கண்டித்து கண்டன வாசகங்கள்.

சுவாமிமலை:

மகாலிங்கசுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராம மக்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே சூரியனார்கோவில் ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்தார்.

54 வயதான இவர் கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது காட்டுத்தீபோல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 12-ந்தேதி மகாலிங்க சுவாமிகள் ஆதீன மடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சூரியனார்கோவில் ஆதீன நிர்வாக பொறுப்புகளை, அறநிலையத்துறையிடம், மகாலிங்கசுவாமி ஒப்படைத்து யாத்திரை புறப்பட்டார்.

இந்த நிலையில், மகாலிங்கசுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் அவரை கண்டித்து கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், மகாலிங்க சுவாமியின் சமீப கால செயல்பாடுகளின் விமர்சனங்களும், அவரது திருமணத்தை குறித்த விமர்சனங்களும், அவரது படங்களுடன் கூடிய வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது.

மகாலிங்க சுவாமிகள் மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வரக்கூடாது என்ற வகையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News