உள்ளூர் செய்திகள்

கோவையில் பஸ், ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

Published On 2022-08-26 10:44 GMT   |   Update On 2022-08-26 10:48 GMT
  • பொதுமக்களும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் வழிபாடு செய்வார்கள்.
  • கோவை ரெயில்நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

கோவை:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி பின்னர் திறந்தவெளி வாகனங்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். மேலும் பொதுமக்களும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் வழிபாடு செய்வார்கள்.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் கோவையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான பணிகளில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக சிலைகள் வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது, சிலைகள் வைக்க உரிய அனுமதி பெறுவது, சிலைகள் வாங்கவது என பல்வேறு நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, கோவையில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் கோவை ரெயில் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் கோவை ரெயில்நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் மக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News