உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு

Published On 2023-09-11 10:04 GMT   |   Update On 2023-09-11 10:04 GMT
  • பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
  • பள்ளி வளாகத்திற்குள் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் வேதனை

கோவை,

கோவை க.கா சாவடி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்து உள்ள மனுவில், எங்கள் பள்ளி ஆரம்ப பள்ளியாக இருந்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

ஆனால் தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு தற்போதுவரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

பின்னர் மாணவ-மாணவிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் பள்ளியில் தமிழ்-ஆங்கில வழி என 2 பிரிவுகளும் ஒரே வகுப்பறையில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பொதுக்கழிவறையை உபயோகப்படுத்த வேண்டி உள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும் அங்குள்ள வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானங்களும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே தற்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்து உள்ளோம்.

-இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News