மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 3 பேர் கைது
- தாதகாப்பட்டி சண்முக நகர், சிங்கார முனியப்பன் கோவில் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார்.
- பாதுஷா மைதீன் கடந்த மாதம் 18-ந் தேதி அளித்த மனுவை ஆய்வு செய்து விசாரித்த, சுகாதார ஆய்வாளர் கடந்த மாதம் 23-ந் தேதி இது குறித்து பதில் அறிக்கை தந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் டவுன், ஜலால்புறா, அதியமான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாதுஷா மைதீன் (வயது 30). இவர் தாதகாப்பட்டி சண்முக நகர், சிங்கார முனியப்பன் கோவில் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் கடை நடத்த எதிர்ப்பு வந்ததால் கடை மூடப்பட்டது.
அனுமதி மறுப்பு
இது குறித்து சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், உதவி ஆணை–யாளர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:
பாதுஷா மைதீன் கடந்த மாதம் 18-ந் தேதி அளித்த மனுவை ஆய்வு செய்து விசாரித்த, சுகாதார ஆய்வாளர் கடந்த மாதம் 23-ந் தேதி இது குறித்து பதில் அறிக்கை தந்தார். அதில் போலீசாரிடம் இருந்து தடையின்மை சான்றிதழ் பெற்று, பின்னர் கடை நடத்திக் கொள்ளலாம் என கடந்த 24-ந் தேதி கடிதம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பம்
இந்த நிலையில் பாதுஷா மைதீன் கடந்த 5-ந் தேதி மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி, கடந்த மாதம் 24-ந் தேதி கடை நடத்த வழங்கப்பட்ட அனுமதி கடிதம், ரத்து செய்யப்பட்டது. மேலும் மாட்டிறைச்சி கடை, குறிப்பிட்ட இடத்தில் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அங்கு இருமுறை சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து சேலம் வட்டாட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் உணவு பாதுகாப்புத் துறையினர், வருவாய்த் துறையினர், அன்னதானப்பட்டி போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து அந்த பகுதியில் கள ஆய்வு செய்தனர். மேற்கண்ட கூட்டு தணிக்கைக் குழுவினர் அளித்த அறிக்கையின் படி, அங்கு மாட்டிறைச்சி கடை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கைது
இந்நிலையில், மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாதுஷா மைதீன் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு, மீண்டும் கடை நடத்த அனுமதி கேட்டு கையில் பதாகையோடு மனு வழங்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.