- 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என முத்திரையிட வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுக்காலனி, கீழப்புலியூர் சிலோன் காலனி மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கள்ளப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட (100 நாள் வேலை) தொழிலாளர்கள் தனித்தனி குழுவாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அவர்கள் கூறுகையில், தற்போது 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்று பி.ஐ.பி.-எச்.எச். முத்திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் அடையாள அட்டையில் அந்த முத்திரையிடப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து எங்களுக்கும் அடையாள அட்டையில் அந்த முத்திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.