கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கோரி தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நாராயணசாமி நாயுடுவின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும், இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு, தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட சான்று ஆவணங்களை அரசின் மக்கள் சாசனம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும், கூடுதல் ஒதுக்கீடு பெற்று பருவத்தில் சாகுபடி செய்ய ஏதுவாக யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.