உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2022-10-13 15:02 IST   |   Update On 2022-10-13 15:02:00 IST
  • சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
  • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது கீழப்பெரம்பலூர் காலனி தெரு முதல் சின்னாறு கரை வரை 900 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தருவதாக கூறி விட்டு அமைச்சர் மற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றார்.

இந்தநிலையில் கீழப்பெரம்பலூர் காலனி பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் புறப்பட்டு வயலூர் கிராமம், அரியலூர் திட்டக்குடி ரோட்டில் கீழப்பெரம்பலூர் செல்லும் பிரிவு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் கீழபெரம்பலூரில் இருந்து அந்த வழியாக சென்ற அமைச்சர் சிவசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News