சுரங்கப்பாதை அமைத்து தர கோரிக்கை
- மாவட்ட கலெக்டரிடம் மனு
- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சுரங்கப்பாதை
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடாலூர் கிராம ஊராட்சி பொதுமக்கள் சார்பாக வருவாய் அலுவலரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் அமைத்து வருகின்றனர். இதனால் பாடாலூர் ஊராட்சியின் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கிழக்கு பகுதியில் உள்ள அவர்களின் காடுகளுக்கு செல்வதற்கும், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடம், வங்கி, கால்நடை மருந்தகம், பால் பண்ணை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவதற்கும் வசதியாகவும், விபத்துகளை தடுப்பதற்காகவும் பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.