பெரம்பலூர் வாலிபரிடம் பணமோசடி செய்த குற்றவாளி டெல்லியில் கைது
- வலைதளம் மூலம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்தவர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிைறயில் அடைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 20). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சனப்டீல் என்ற வலைதளத்தில் பொருட்கள் வாங்கியதில் கார் பரிசு விழுந்திருப்பதாக குறுந்தகவல் வந்தது. மேலும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறிய குற்றவாளிகள் ரூ.6.34 லட்சம் பணத்தை 8 வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றி விட்டனர்.
இதனால் பணத்தை பறிகொடுத்த ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
டெல்லி ரோகினி என்ற பகுதியில் குற்றவாளிகளான உத்திரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த ரோகித் பால், கிஷன் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அங்கித் பன்சால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் பணத்தையும், ஒரு லேப்டாப், ஒரு பிரிண்டர், 13 செல்போன்கள், 62 சிம்கார்டுகள், 33 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கவர்கள், ஏடிஎம் கார்டுகள், கீ போர்டுகள் மற்றும் பேங்க் செக்புக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ந்தேதி டெல்லி ரோகினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் வழக்கு சொத்துக்களுடன் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதல் என்கிற சுஜித் குமார் திவாரி என்பவர் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீஸ்காரர்கள் சதீஷ்குமார், திலிப்குமார், முத்துசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் குற்றவாளிகளை தேடி டெல்லி சென்று கடந்த 25-ந்தேதி அங்குள்ள ரோகினி என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளி பாதல் என்கிற சுஜித் குமார் திவாரியை கைது செய்தனர். பின்னர் கடந்த 26-ந்தேதி அங்குள்ள கோர்ட்டில் அனுமதி பெற்று நேற்று பெரம்பலூர் குற்றவியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.