- 70 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
- லாரி டியூபுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, பிள்ளாங்குளத்தில் காட்டு கொட்டகையில் வசித்து வரும் பெருமாள் என்ற கொளஞ்சி (வயது 56) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை லாரி டியூப்கள் மற்றும் பாக்கெட்டுகளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் கொளஞ்சியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்த சுமார் 70 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.