உள்ளூர் செய்திகள்

விவசாய குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-09-27 07:12 GMT   |   Update On 2022-09-27 07:12 GMT
  • விவசாய குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
  • கலெக்டர் அலுவலகத்தில்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வேப்பந்தட்டை தாலுகா, மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது வெங்கடாஜலத்தின் மூத்த மகள் சிவரஞ்சனி திடீரென்று பையில் வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தீ குளித்து தற்கொலை செய்வதற்காக தனது உடல் மீதும், குடும்பத்தினர் மீது ஊற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர்.

இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் வயலுக்கு அருகில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தினை வயலுக்கு சென்று வர பாதையாக பயன்படுத்தி வந்ததாகவும், இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியும், மண் வெட்டி கரை எழுப்பியும் அடைத்துள்ளனர். இதனால் அவர்களால் விவசாயம் செய்ய வயலுக்கு செல்ல முடியவில்லையாம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களது வயலுக்கு பாதை அமைத்து கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு தீ குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றனர்.

Tags:    

Similar News