வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
- வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்
- ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற கல்வி என்பது மிக அவசியமானது என கலெக்டர் உரையாற்றினார்.
அகரம்சீகூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் மற்றும் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தும் விதம் குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களிடம் உரையாற்றுகையில், ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற கல்வி என்பது மிக அவசியமானது. மேல்நிலை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலையும், இன்றைய கால சூழலுக்கு ஏற்ப என்னென்ன உயர்கல்வி படிப்புகள் உள்ளது, என்ன படித்தால் என்ன வேலைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது என ஒவ்வொன்றும் உங்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் விளக்கப்படும். நான் முதல்வன் திட்டம் மாணவ செல்வங்களில் உயர்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் உன்னத திட்டம். உங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க சத்துணவு, உங்கள் கல்வி வளர்ச்சிக்கு வழிகாட்ட தகுதியான ஆசிரியப் பெருமக்கள், தரமான பாடப்புத்தகங்கள், அரசின் இதர இலவச திட்டங்கள் என உங்களின் வளர்ச்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக, சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக அனைவரும் உருவாக மனமார வாழ்த்துகின்றேன். இவ்வாறு தெரிவித்தார். பின்னர் பள்ளிகளின் சத்துணவு கூடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்படும் சத்துணவின் தரம் குறித்தும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை, தலைமையா சிரியர்கள் செல்வராஜ், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.