உள்ளூர் செய்திகள்

அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா

Published On 2022-06-28 09:43 GMT   |   Update On 2022-06-28 09:43 GMT
  • அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் கிராம மக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தில் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி உள்ளிட்ட எதுவும் செய்து தரவில்லை.

பழுதான கைப்பம்புகள் சரி செய்யப்படவில்லை. கால்வாய்களை சீரமைக்கப்படவில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. மகளிர் பொது சுகாதார வளாகம் பராமரிக்கப்படுவதில்லை. குப்பைகள் ஊரின் அருகே கொட்டப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அப்போது கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்துவார் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரும் வந்து இதுவரை விசாரணை நடத்தவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதையடுத்து அவர்களில் சிலர் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்துமனு கொடுத்து விட்டு வந்தனர். 

Tags:    

Similar News