உள்ளூர் செய்திகள்

நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் தேரோட்டம்

Published On 2022-08-27 15:29 IST   |   Update On 2022-08-27 15:29:00 IST
  • நாட்டார்மங்கலம் பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள பச்சாயி அம்மன், மன்னார் ஈஸ்வரன் கோயிலில் திருவிழா இம்மாதம் 19ம் தேதி இரவு வடக்கிமலை அடிவாரத்தில் உள்ள கொடுவாய் தீட்டி பாறையில் குடி அழைப்பு, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து, திருவிழாவில் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை பாரம்பரிய முறைப்படி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பச்சாயி, மன்னார் ஈஸ்வரன், பூவாயி, காத்தாயி, விநாயகர் சுவாமிகள் வீதியுலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் வீதியுலாவும் நடைபெற்றது.25ம் தேதி காத்தாயி சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயில் வளாகத்தில் வீதியுலா வந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பச்சாயி அம்மன், காத்தாயி, பூவாயி சுவாமிகள் வைக்கப்பட்டு மாலை தேரோட்டம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் வளாகத்தில் சுற்றி வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.

அதனை தொடர்ந்து பூக்குழி மிதித்தல் நடைபெற்றது. பக்தர்கள் குழந்தையை சுமந்து தீ மிதித்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் பாடாலூர் போலீசார் ஈடுபட்டனர். விழாவில் ஆலத்தூர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் ஹேமாவதி நாட்டார்மங்கலம், கூத்தனூர், சீதேவிமங்கலம், செட்டிகுளம், பாடாலூர் போன்ற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் இன்று தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. 

Tags:    

Similar News