உள்ளூர் செய்திகள்

குன்னம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-07-10 07:00 GMT   |   Update On 2023-07-10 07:00 GMT
  • குன்னம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி சென்ற 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம், பேரளியில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குன்னம் வட்டார வழங்கல் அலுவலர் சீனிவாசனுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் பெரம்பலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் பேரளிக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் வட்ட வழங்கல் அலுவலரின் உதவியாளர் அருள்முருகன், குன்னம் தனி வருவாய் ஆய்வாளர் ஏகாம்பரம், பேரளி கிராம உதவியாளர் பெரியசாமி ஆகியோருடன் ரேஷன் அரிசி கடத்தி சென்றதாக கூறப்பட்ட சரக்கு வாகனத்தை போலீசார் தேடி கொண்டிருந்தனர். அப்போது பேரளியில் மருவத்தூர் பிரிவு சாலையில் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நோக்கி அவர்கள் சென்றனர். அவர்களை கண்டவுடன் சரக்கு வாகன டிரைவர் வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடினார்.

போலீசார் துரத்தி சென்றும் டிரைவரை பிடிக்க முடியவில்லை. பின்னர் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனத்தில் தலா 40 கிலோ எடையுள்ள 45 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. பின்னர் அந்த சரக்கு வாகனத்தை கைப்பற்றிய குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 1,800 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பெரம்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News