அன்னூர் அருகே 11 ஆண்டுகளாக பொதுக்கழிவறையை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் மக்கள்
- கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அரசின் சார்பில் மக்கள் பயன்பாட்டுக்காக பொது கழிவறை கட்டப்பட்டது.
- கழிப்பறை கட்டி விட்டு அங்கு உரிய தண்ணீர் வசதி ஏற்படுத்தாமல் விட்டு விட்டனர்
அன்னூர்,
கோவை அன்னூர் அடுத்த அக்கரை செங்கம் பள்ளி கிராமம் உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அரசின் சார்பில் மக்கள் பயன்பாட்டுக்காக பொது கழிவறை கட்டப்பட்டது.
கழிப்பறை கட்டி விட்டு அங்கு உரிய தண்ணீர் வசதி ஏற்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால் கட்டி 11 ஆண்டுகள் ஆகியும் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தனி கழிவறை இல்லாத குடும்பங்கள் இந்த பொது கழிவறையை நம்பி தான் உள்ளனர்.
இதுகுறித்து எத்தனையோ முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர் மக்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு தீர்வு கேட்டால் 3 மாதங்கள், 6 மாதங்களில் சரி செய்து விடுகிறோம் என்று கூறுகின்றனரே தவிர இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் கழிப்பறை இருந்தும் திறந்த வெளிகளை இன்னும் பயன்படுத்தும் நிலை அங்கு காணப்படுகிறது.
எனவே பொது கழிப்பறையில் உரிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.