உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கிரானைட் குவாரிகளை கண்டறிய 25 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன் தகவல்

Published On 2022-08-18 10:06 GMT   |   Update On 2022-08-18 10:06 GMT
  • தமிழக முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கு முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழக முதல்-அமைச்சர் நடத்தி முடித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் நடந்து வரும் 35-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியினை தொடக்கி வைத்த தமிழக சுற்றுச்சூழல்- கால நிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட தடகள சங்கமும், தமிழக தடகள சங்கமும் இணைந்து, மாநில அளவிலான தடகளப் போட்டிகளை நடத்தி வருகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை கண்டறிந்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி கொடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு ஒரு சிந்தட்டிக் டிராக், உயர்மின் கோபுர விளக்கு, ஜூடோ அரங்கம், நடைபாதையில் மின்விளக்கு ஆகியவற்றை கேட்டுள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்தையும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதே போல் ஓசூர் மாநகராட்சி விளையாட்டு அரங்கில், ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதுவும் பரீசிலிக்கப்படும். கிரா மப்புற இளைஞர்களை கண்டறிந்து, குறிப்பாக 9 லிருந்து 12 வயதுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகம் முழுவதும் கண்ட றிவதற்கான பணிகளை துவங்க இருக்கிறோம்.

இங்கு நான்கு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் தங்க வேட்டை என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கு முதல்கட்டமாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

கடந்த 2006 முதல் 2011 வரை அன்றைக்கு துணை முதல்வராக இருந்த காலத்தில், தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இடை யில் அதை பராமரிக்க முடியாத சூழலில், மீண்டும் அதை பராமரிக்கின்ற நடவடிக்கைகள் தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

விளையாட்டு பயிற்சி யாளர்கள் குறைவாக உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் 86 பேர் என்.ஏ.எஸ் முடித்துள்ளனர். புதிதாக முடித்தவர்களையும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் போதிய பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழக முதல்-அமைச்சர் நடத்தி முடித்துள்ளார்.

அதன் அடிப்படையில், வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை உலக மகளிர் டென்னிஸ் போட்டியானது சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்து சர்வதேச தரத்திலான போட்டிகள் சூழ்நிலைக்கு ஏற்ப நடத்துவற்கு தமிழக முதல்வர் தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கிரானைட் குவாரிகளை கண்டறிய 25 பேர் கொண்ட குழு நேரடியாக ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுவது மிகவும் குறைந்துள்ளது. தற்போது நவீன தொழில் நுட்பம் பயன்படுத்துவதால், அந்த மாதிரியான பழக்க வழக்கம் குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News