உள்ளூர் செய்திகள்

கும்பாவுருட்டி அருவி திறக்கப்பட்டதால் ஆனந்தமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

5 ஆண்டுகளுக்கு பின் கும்பாவுருட்டி அருவி திறப்பு- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2022-07-12 09:53 GMT   |   Update On 2022-07-12 09:53 GMT
  • கும்பாவுருட்டி அருவிக்கு காட்டு பாதையில் பயணித்து செல்லுவதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க ஆர்வம் காட்டி வருவார்கள்.
  • கேரளாவில் பெய்துவரும் மழையால் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதையொட்டி சீசனுக்காக திறக்கப் பட்டுள்ளது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் மேக்கரைக்கு மிக அருகே கும்பவுருட்டி அருவி இயற்கை அழகுடன் அடர்ந்த வனபகுதியில் அமைந்துள்ளது.

இதனை கேரள வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குவிவது வழக்கமாக இருந்தது. காட்டு பாதையில் பயணித்து செல்லுவதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான இயற்கை சூழலை அனுபவிக்க ஆர்வம் காட்டி வருவார்கள். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருவிக்கு கீழே உள்ள குழியில் விழுந்து 2 சுற்றுலா பயணிகள் இறந்ததையடுத்து அருவி பகுதியில் குளிக்க வனத்துறை சார்பில் பாதை மூடப்பட்டது. சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கோரிக்கைக்கு பின்னர் ரூ.25 லட்சம் செலவில் பாதை புதுப்பிக்கப்பட்டது. பெரிய பள்ளங்கள் முழுமையாக காங்கிரீட் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு திறப்புவிழா நடந்தது. கிராம பஞ்சாயத்து தலைவர் சுஜா தாமஸ் தலைமை தாங்கினார்.

அஞ்சல் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராதா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் அனில்குமார், தொகுதி உறுப்பினர் லேகா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க நாளான நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஏற்கனவே கேரளாவில் பெய்துவரும் மழையால் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் வருவதையொட்டி சீசனுக்காக திறக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News