மில் அதிபரின் பெற்றோரிடம் பணம், நகை கொள்ளை அடித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
- நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த வெடியரசம் பாளையத்தில் கடந்த 8-ந் தேதி ஒரு மர்மகும்பல் ரூ.28 லட்சம், 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
- இந்த கொள்ளையில் 3 கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த வெடியரசம் பாளையம் பாலி காட்டைச் சேர்ந்தவர் மில் அதிபர் பிரகாஷ். இவரது பெற்றோரை கடந்த 8-ந் தேதி கட்டிப்போட்டு ஒரு மர்மகும்பல் ரூ.28 லட்சம், 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் அந்தியூரை சேர்ந்த போலி சாமியார் ரமேஷ், ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் உட்பட 18 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விக்கி என்ற விக்னேஸ்வரனை போலீசார் கோவையில் நேற்று கைது செய்தனர். அவரை குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளையில் 3 கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு கும்பலில் உள்ளவர்களுக்கு மற்றவர்கள் குறித்து சரிவர விவரங்கள் தெரியவில்லை. இதனால் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தில் 25 சதவீதம் மட்டுமே கைப்பற்றப்பட்டு உள்ளது.
இதனால் முழு பணத்தையும் மீட்கும் வகையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கொள்ளையர்களில் சிலரை விரைவில் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்படி விசாரிக்கும் பட்சத்தில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள் முழுவதும் மீட்கப்படும் எனவும் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.