போலி தங்க நகைகளை அடமானம் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.
காரைக்காலில் போலி தங்க நகையை விற்க முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது: பெண் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
- பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
- இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பெரமசாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரும் கைலாஷ் என்பவர் கடையில், கடந்த 10-ந்தேதி, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச் சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான் (35) என்பதும், இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுவை போலீஸ் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது நெருங்கிய தோழி (கள்ளகாதலி) புவனேஸ்வரி (35) காரைக்காலைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோர் உள்ளது தெரியவந்தது. இதில் ரிபாத் காமில்தான், ஜெரோம் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொ ண்டபோது, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நபர்களை வைத்து இது போன்று போலி நகையை வங்கிகளில் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் (35) என்பவர், காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் வங்கியில் 30 பவுன் போலி தங்க நகையை வைத்து, கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முகமது மைதீனை நேற்று கைது செய்தனர் .,இந்நிலையில், காரைக்காலில் உள்ள தனியார் நிதி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிட் வாங்கி கிளையில், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ் (38) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 12 பவுன் போலி தங்க செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் பெற்றுள்ளார். இதுநாள் வரை நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் நகையை பரிசோதித்தார். இதில் அது போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாஸை தேடி வருகின்றனர். புவனேஸ்வரி மற்றும் தேவதாஸ் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.