உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி உடுமலையில் மண்பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்

Published On 2023-12-31 04:40 GMT   |   Update On 2023-12-31 04:40 GMT
  • மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
  • பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும்.

உடுமலை:

தமிழா்களின் பாரம்பரியம்,பண்பாட்டை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அரிசி, வெல்லம், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து கொண்டாடுவது தமிழா்களின் மரபாகும்.

முன்னோர்கள் காலத்தில் இருந்தே புதிய பானையில் பொங்கலிடுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான பொங்கல் பானைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

மண் பானையில் செய்யப்படும் பொங்கல் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்பதால் மண்பானைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் வியாபாரம் அதிகரிக்கும் என்பதால் மண்பானை உற்பத்தி செய்வதில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, சக்கரை உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து மண்ணால் செய்யப்பட்ட அடுப்பு மற்றும் மண்பானை வழங்க முன்வர வேண்டும். இதனால் மண்பானை தொழில் மேம்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News