உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்த போது எடுத்த படம்.


சிவகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம்

Published On 2022-09-11 14:16 IST   |   Update On 2022-09-11 14:16:00 IST
  • பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் தீவிர தூய்மை பணி முகாம் அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம், அரசு தாலுகா மருத்துவமனை, ரெட்டைமடம் தெரு, கீரைக்கடைத் தெரு, மந்தை வெளி, பவுண்டு தொழு தெரு, பழைய காவல் நிலையம் அருகில் மற்றும் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் மக்கும் குப்பை தொட்டி மற்றும் மக்காத குப்பை தொட்டிகள் வைத்து பொதுமக்கள் தனித் தனியே குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவகிரி விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் சேகரிக்கும் குப்பைகளை பள்ளியின் வளாகத்தில் குப்பை கிடங்கு ஏற்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உரப்பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை இயற்கை உரங்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய விவசாய உற்பத்தி குறித்தும், இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளையக்கூடிய விளை பொருட்களால் ஏற்படும் பயன்கள் குறித்தும், குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், வரிவிதிப்பு குழு உறுப்பினர் செந்தில்வேல், கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, மருதவள்ளி முருகன், ரத்தினராஜ், முத்துலட்சுமி, தலைமை எழுத்தர் தங்கராஜ், மாடசாமி, சக்திவேல், குமார், தினேஷ் குமார், லாசர் எட்வின் ராஜாசிங், செல்லப்பன், மேஸ்திரி இசக்கி மற்றும் தூய்மை பணியாளர்கள், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News