உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

Published On 2023-08-18 09:22 GMT   |   Update On 2023-08-18 09:22 GMT
  • போலீசார் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
  • ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொள்ளாச்சி,

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சிலர் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மூட்டைகளில் அடைத்து இருசக்கர வாகனம், கார், டெம்போ, லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றில் கேரள மாநிலத்துக்கு சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், போலீசார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் செம்மனாம்பதி, மீனாட்சிபுரம், கணபதி பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் ரேஷன் அரிசி கடத்தப்படும் வழித்தடமாக கண்டறியப்பட்டு அங்கு ரோந்து மற்றும் வாகனத்தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநராக வன்னிய பெருமாள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் கோவை சரக டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி கடத்தலில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தணிக்கை செய்தனர்.

மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News