சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வலியுறுத்தல்
- அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் 15 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், எம்.ஆர்.பி., செவிலியர்கள், கணினி இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப்பணி யாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிற அரசாணைகள் 115, 139, 152-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை வெங்கடாசலபதி, கால்நடைத் துறை செல்வகுமார், வட்டச் செயலாளர் மணி, குடிநீர் வடிகால் வாரியம் பெரியசாமி, பெருமாள், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே போன்று மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.