உள்ளூர் செய்திகள்

கனமழையால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்ற வாகன ஓட்டிகள்.

கொடைக்கானலில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2023-10-09 10:35 IST   |   Update On 2023-10-09 10:35:00 IST
  • தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
  • வார சந்தை நாளான நேற்று காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள்,காய்கறி வியாபாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிதமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வந்தது .

அதனைத்தொடர்ந்து மாலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளான அண்ணா சாலை, பஸ் நிலையப்பகுதி, ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர்.கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், செண்பகனூர், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக சாலைகள் முழுவதிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக கொடைக்கானல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

மேலும் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். வார சந்தை நாளான நேற்று காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள்,காய்கறி வியாபாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். தொடர் கனமழையால் நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் பகல் பொழுதிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News