நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை-கலெக்டர் அம்ரித் பேட்டி
- கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 2 இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன.
- அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் நிருபர்களிடம் கூறியதாவது, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடா்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
ஆனால் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. இதுவரை மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டதில் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 2 இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிப்புகள் மிக குறைந்த அளவிலே ஏற்பட்டுள்ளன. முகாம்களில் பொதுமக்களை தங்கவைக்கும் அளவுக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும் 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
குறிப்பாக மண்சரிவு ஏற்படும் இடங்களைத் தொடா்ந்து கண்காணிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள தேவையான எந்திரங்கள், உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களைத் தங்கவைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. பாதிப்புகளை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்பு படை ஏற்கெனவே வரவழைக்கப்பட்டுள்ளது.
இயற்கை இடா்பாடுகளால் பாதிப்புகள் ஏற்படும்போது மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 2450034, 2450035 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். ஊட்டி, குன்னூா், கூடலூா், பந்த லூா், கோத்தகிரி, குந்தா ஆகிய 6 வட்டங்களிலும் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சாலையோரம் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற கோட்டாட்சியா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மழை ெதாடங்கும் முன்பே 200-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதுதவிர ஏதேனும் அபாயகரமான மரங்கள் இருக்கும் பட்சத்தில் வருவாய்த் துறை சாா்பில் ஆய்வு செய்து மரங்களை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கூடலூா் பழைய கோர்ட் சாலையில் உள்ள தனியாா் பள்ளியின் தடுப்பு வேலி மழையினால் பாதிக்கப்பட்டு மண் சரிந்துள்ள பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டாா்.
வருவாய் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, வட்டாட்சியா் ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.