புதிய நகர பஸ் இயக்கப்பட்டது.
மயிலாடுதுறை- சீர்காழி வழித்தடத்தில் புதிய நகர பஸ் இயக்கம்
- வள்ளாலகரம் ஊராட்சியில் 5 பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து வசதி வேண்டும்.
மயிலாடுதுறை சீர்காழி சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் வள்ளாலகரம் ஊராட்சியில் 5 பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.
வள்ளாலகரம் ஊராட்சியில் இருக்கக்கூடிய அங்காடியை இரண்டாக பிரித்து நாகங்குடி சாலையில் ஒரு புதிய அங்காடியை தொடங்கிட வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகவலை அறிந்த அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்களுடைய மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததனர்.
நடைபெற இருந்த உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிகொள்வதாக கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக கூட்டமைப்பின் முதல் கோரிக்கையான மயிலாடுதுறை-சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து வேண்டும் என்ற கோரிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டது.
சிவப்ரியா நகர் பஸ் நிறுத்தத்தில் புதிய பஸ் இயக்க தொடக்க விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயின், ஒன்றிய குழு உறுப்பினர் மோகன், கூட்டமைப்பின் பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சாமி செல்வம், கூட்டமைப்பு தகவல் நெறியாளர் கார்த்திகேயன், கூட்டமைப்பு நிர்வாகிகள் துரை.குணசேகரன், கோபு, பொன்.நக்கீரன், உதயகுமார், இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.