உள்ளூர் செய்திகள்

தென்காசி, மதுரை, பழனி வழியாக இயங்கும் நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயிலை நிரந்தரமாக்க வேண்டும்-பயணிகள் கோரிக்கை

Published On 2022-07-23 09:42 GMT   |   Update On 2022-07-23 09:42 GMT
  • இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.
  • நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி:

தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இயங்கும் நெல்லை- மேட்டுப் பாளையம் வாராந்திர ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி விதி எண் 377 ன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வியில், பழனி முருகன் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழனிக்கு வருவது வழக்கம். இதில் பழனி ரெயில் நிலையம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் கொடைரோடு ரெயில் நிலையமானது கொ டைக்கானல் செல்வதற்கு மிக முக்கியமான ரெயில் நிலையமாகும். இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக இயங்கி கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர ரெயிலை பொதுமக்களின் நலன் கருதி நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு ரெயிலானது மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர், தோரணமலை முருகன் கோவில், பாபநாசம் உள்ளிட்ட முக்கிய புண்ணிய தலங்கள் வழியாக செல்வதால் இந்த சிறப்பு ரெயிலை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சிறப்பு ரெயிலானது 11 வாரங்களில் ரூ.80 லட்சம் வரை வருமானம் தந்துள்ளது.

Tags:    

Similar News