உள்ளூர் செய்திகள்

உடுமலை அருகே மணல் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-01-28 13:26 IST   |   Update On 2023-01-28 13:26:00 IST
  • சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
  • ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

உடுமலை :

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது உடுமலை,மடத்துக்குளம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விரைவாக நடந்து வருகிறது.

இதற்காக அதிக அளவில் மண் மற்றும் சரளைக்கற்கள்,ஜல்லிக்கற்கள் போன்றவை தேவைப்படுகிறது.இவற்றை கொண்டு செல்ல பெரிய அளவிலான லாரிகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களால் இயக்கப்படும் இந்த லாரிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் உடுமலையையடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சி ஆறுமுகம் நகர் பகுதியை ஒட்டி மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவே இந்த சாலை உருவாக்கப்பட்டது.அதிக பட்சம் 10 டன் எடை வரை மட்டுமே தாங்கக்கூடிய கிராமத்து சாலையில் 50 டன்னுக்கு மேல் எடையுடன் கூடிய கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலை பல இடங்களில் சேதமடைந்து மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது.

அந்த பள்ளங்களை சீரமைக்கக் கோரி கடந்த முறை போராட்டத்தில் ஈடுபட்ட போது மண் கொட்டி பள்ளங்களை மூடி விட்டார்கள். தற்போது லாரிகள் வேகமாக செல்லும்போது அதிக அளவில் மண் புழுதி பறக்கிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் உள்ள சமையல் பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் புழுதி படிந்து மாசடைகிறது.

அத்துடன் மண் புழுதியை தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய நிலையால் பல்வேறு விதமான சுவாசக்கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் மண் புழுதியால் அருகிலுள்ள விளைநிலங்களிலுள்ள பயிர்கள் பாழாகி வருகிறது. இலைகளின் மீது தூசி படிவதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

மல்பெரி இலைகளில் தூசி படிவதால் அவற்றை உண்ணும் புழுக்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் வாழைத்தார்களில் புழுதி படிந்திருப்பதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்ய முன்வருகிறார்கள். இதனால் செலவு செய்து தண்ணீரை பீய்ச்சியடித்து கழுவி வைத்தோம். ஆனால் மீண்டும் புழுதி படிந்து விட்டது.

தீவனத்துக்காக வளர்க்கும் யானைப்புல் போன்றவற்றில் மண் படிந்து கால்நடைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே லாரிகளில் மண்ணை மூடி கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக வேகத்தில் இயக்குவதைத் தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். புழுதி பறப்பதைத் தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் ஒத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரிகளை விடுவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் சாலைப் பணிகளுக்காக இயக்கப்பட்ட வாகனத்தால் விவசாய தோட்டத்தின் மின் கம்பி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தட்டிக் கேட்ட விவசாயி மீது வாகனத்தை ஏற்றி விடுவேன் என்று மிரட்டுவதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News