உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட கடமான் இறைச்சியையும் படத்தில் காணலாம்.

களக்காடு அருகே கடமானை வேட்டையாடிய கும்பல் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Published On 2023-08-10 14:45 IST   |   Update On 2023-08-10 14:45:00 IST
  • களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.
  • அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.

கடமான்

அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஸ்டீபன்ராஜ், (30), முத்துராஜ் மகன் ராஜாசிங் (27), தங்கத்துரை மகன் ரவிக்குமார் (27), குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த முவின் (40) உள்பட சிலர் பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கடமானை வேட்டை யாடி கறியை வெட்டி பங்கு போட்டதும், மீதி இறைச்சியை காரில் எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து ரவிக்குமார், ராஜாசிங் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் தலையணை தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் தலையணை சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். வனத்துறை அதிகாரிகள் சென்ற ஜீப்புகளை யும் அவர்கள் மறித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்

இது குறித்து வனத்துறை அளித்த தகவலின் பேரில் பாதுகாப்புக்கு களக்காடு போலீசார் விரைந்து சென்றனர். இதையொட்டி தலையணை மூடப்பட்டது. மாலை வரை தலையணை திறக்கப்பட வில்லை. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தலையணைக்கு வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இதில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ், முவின் உள்ளிட்ட கும்பலை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜாசிங் புதுமாப்பிள்ளை ஆவார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்ட கடமான் வயிற்றில் குட்டி இருந்துள்ளது. அதனை கொடூரமான முறையில் கீறி வெளியே எடுத்த கும்பல் கடமானின் பாகங்களுடன் குட்டியின் உடலையும் கிணற்றில் வீசிய நிலையில் போலீசில் சிக்கி உள்ளனர்.

Tags:    

Similar News