கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
திண்டுக்கல்லில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தொடக்கம்
- அந்தந்த வீடுகளுக்கு தகவல் சேகரிப்பாளர்கள் மடிக்கணினியுடன் வந்தனர். அவர்களுக்கு உதவியாக மருத்துவ துறை பணியாளர்கள் வருகின்றனர்.
- அந்தந்த பகுதிகளில் டிசம்பர் 22ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்றனர்.
குள்ளனம்பட்டி:
தமிழகத்தில் 6-வது தேசிய குடும்பநல கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலுடன் திண்டுக்கல் காந்தி கிராமம் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் 20ந் தேதி முதல் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திண்டுக்கல் குறிஞ்சி நகரில் கணக்கெடுப்பு பணியை இன்று தொடங்கினர். இதில் டாக்டர்கள் சீதாலட்சுமி, கவிதா தலைமையில் மேற்பார்வையாளர்கள் சம்பத், அபர்ணா, ஜெயந்தி ஆகியோர் மேற்பார்வையிலான குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.ஏற்கனவே உள்ள தகவல் பதிவுகளை கொண்டு கணினியில் குலுக்கல் முறையில் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த வீடுகளுக்கு தகவல் சேகரிப்பாளர்கள் மடிக்கணினியுடன் வந்தனர். அவர்களுக்கு உதவியாக மருத்துவ துறை பணியாளர்கள் வருகின்றனர்.
வீட்டில் உள்ள அடிப்படை வசதிகள், தாய், சேய் நலம், குழந்தைகள் பிறப்பு, இறப்பு விவரங்கள், ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல், குடும்ப கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கேள்விகள் கேட்டு அதற்கு குடும்பத்தினர் அளிக்கும் பதிலை பதிவு செய்து கொண்டனர். இதில் அந்தந்த குடும்ப சூழ்நிலைக்கு தேவையான கேள்விகளை மட்டும் கேட்டு பதிவு செய்கின்றனர். இதுதவிர அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் சத்து உள்ளதா? என்பதையும் பரிசோதித்து உறுதி செய்து பதிவு செய்து கொண்டனர். மேலும் ரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து கணக்கெடுப்பாளர்கள் கூறுகையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 44 பகுதிகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் டிசம்பர் 22ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்றனர்.