உள்ளூர் செய்திகள்

ரூ.17 லட்சம் ஏமாற்றிய ஆர்.டி.ஓ. அலுவலக ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2023-11-27 07:01 GMT   |   Update On 2023-11-27 07:01 GMT
  • விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.
  • ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (41) தேங்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார்.

இவரது நண்பரான திருச்செங்கோடு அருகே மொளசியை சேர்ந்தவர் விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

ரியஸ் எஸ்டேட் தொழில்

விஜயகுமார் மற்றும் அவரது மனைவி கவிதா (37) மற்றும் உறவினரான ஆண்டலூர்கேட்டை சேர்ந்த சுரேஷ் (45) ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், ஈஸ்வரனையும் கூட்டாக தொழில் செய்ய அழைத்துள்ளனர்.

இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ஈஸ்வரன் ரூ.17 லட்சம் பணத்தை விஜயகுமார் உள்ளிட்டவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

இதனிடையே ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் மேற்கொண்டு பணம் தராமல் இதுவரை கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு 3 பேரும் பணத்தை திருப்பி தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈஸ்வரன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News