வாழப்பாடி தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்
பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
- பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல மாதங்களாக வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் கவர்கல்பட்டி, சென்றாயன்பாளையம், வி.மன்னார்பாளையம், டி.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல மாதங்களாக வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வாழப்பாடி வட்டத் தலைவர் பழனிமுத்து தலைமையில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், ராமமூர்த்தி, பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழப்பாடி தாலுகா செயலாளர் தங்கவேலு மற்றும் சீனிவாசன், ராஜா, கணேசன், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட தாசில்தார் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த்துறையினர், விவசாயிகள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.