உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பெருங்குறிச்சி ஊராட்சியில் நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

Published On 2023-11-08 07:18 GMT   |   Update On 2023-11-08 07:18 GMT
  • நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.
  • இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெருங்குறிச்சி ஊராட்சி தலைவர் திரு மாணிக்கம் இந்த வயல்வெளி முகாமிற்கு முன்னிலை வகித்தார்.

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்து நிலக்கடலை சாகுபடியை பாதிக்கும் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.

நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு தாக்கும் பருவம், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறினார்.

நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கான பிரசுரங்கள் இந்த முகாமில் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும், வேளாண் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜோதிமணி இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News