நாமக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக வானம் பகல் ேநரத்தில் மேக மூட்டமாக காணப்பட்டது. லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை பெய்ததால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சேலம் ரோடு, கோட்டை ரோடு, நேதாஜி சிலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் ரோட்டில் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேர வெப்ப நிலை மிகவும் குறைந்து குளிர் காற்று வீசியது.
இந்த ஆண்டு பருவமழை உரிய பெய்யாததால், மானாவரி பயிர் விதைப்பு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது காலம் கடந்து உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் விபரம் வருமாறு:-
நாமக்கல் 58, எருமப்பட்டி 60 , குமாரபாளையம் 85.40 , மங்களபுரம் 34.60, மோகனுர் 77, பரமத்தி வேலூர் 60, புதுச்சத்திரம் 14.40 , ராசிபுரம் 18, சேந்தமங்கலம் 39, திருச்செங்கோடு 15, கொல்லிமலை (செம்மேடு) 27.
மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 488.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.