உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

காவிரி குடிநீர் பெற முன்பணம் வசூல்: நீரேற்று பாசன சங்க தலைவர் வீட்டை விவசாயிகள் முற்றுகை

Published On 2023-06-19 07:28 GMT   |   Update On 2023-06-19 07:28 GMT
  • வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்பு கரட்டையில் திருநாகேஸ்வர் நீரேற்று பாசன சங்கம் உள்ளது.
  • பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி தண்ணீரை பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன நீர் கேட்டு தலா ஒரு லட்சம் வீதம் முன் பணமாக கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா, வில்லிபாளையம் அருகே உள்ள சுண்ணாம்பு கரட்டையில் திருநாகேஸ்வர் நீரேற்று பாசன சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக நாமக்கல் தாலுகா, கீரம்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2020- ஆம் ஆண்டு ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி காவேரி ஆற்றில் இருந்து நீரேற்று பாசன திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்து அதன் மூலம் குச்சிபாளையம், கீரம்பூர், வரப்பாளையம், வில்லியம்பாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி தண்ணீரை பெறுவதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 300 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன நீர் கேட்டு தலா ஒரு லட்சம் வீதம் முன் பணமாக கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பாசனத்திற்கான காவேரி தண்ணீரை பெற்றுத்தர எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தண்ணீருக்காக பணம் கொடுத்த விவசாயிகள் பாசன சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு பலமுறை கேட்டுள்ளனர்.ஆனால் பணத்தை திருப்பி தராததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் நேற்று கீரம்பூரில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் போலீசார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கோபாலகிருஷ்ணன் விவசாயிகளிடம் பெற்ற முன் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100- க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags:    

Similar News