உள்ளூர் செய்திகள்

ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறையில் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.

நெல்லையில் பாரதியார் படித்த பள்ளியில் மாணவிகள் இசை அஞ்சலி- நினைவு நாளையொட்டி மரியாதை

Published On 2023-09-11 09:15 GMT   |   Update On 2023-09-11 09:15 GMT
  • பாரதியார் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • பாரதியாரின் சிலைக்கு மாணவிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

நெல்லை:

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 102-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெண் கல்வி, பெண் முன்னேற்றத்திற்காக பல்வேறு கவி பாடி குரல் கொடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் அந்த வகுப்பறையில் மாணவிகள் மட்டும் கல்வி கற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறைக்கு பாடம் படிக்க மாணவிகள் செல்லும்போது பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் அவர் அமர்ந்திருந்த இடத்தில் காலணி கூட அணியாமல் சென்று பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினத்தையொட்டி அவர் படித்த வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு பள்ளி மாணவிகள் மகாகவி பாரதியாரின் பாடல்கள் பாடி இசையஞ்சலி செலுத்தி மலர் தூவி மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உலகநாதன், பள்ளி ஆசிரியர்கள் சொக்கலிங்கம்,ராமலட்சுமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News