உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு கண்டனம்- எம்.பி.ரஞ்சன்குமார் அறிக்கை

Update: 2023-01-28 10:56 GMT
  • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஆதிதிராவிடர் நலனில் அக்கறையில்லாத அரசு என்ற குற்றம் சாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட காழ்ப்புணர்ச்சி செயலாகும்.
  • பா.ஜ.க. என்றாலே ஆதி திராவிடர்களுக்கு எதிரான கட்சி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்கள் ஜாதிச் சான்றிதழ் பெற நீண்டகாலமாக அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

திருவல்லிக்கேணியை பூர்வீகமாகக் கொண்ட ஜாதிச் சான்றிதழ் கோரிய ப.ஜெயக்குமார் என்பவர் குருமன்ஸ் பழங்குடியினத்தைச் சார்ந்தவர். 150 ஆண்டுகளாக ஜாம்பஜார் பகுதியில் இவரோடு 220 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க. கட்சியில் இவர் சாதி சான்று வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டார். அதற்கு பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தை நாடியதன் மூலம் சான்றிதழ் பெறுகிற வாய்ப்பு கிடைத்தது.

இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பல கொடுமைகளுக்கு ஆளான நிலையிலிருந்து அவர்களுக்கு நீதியும், நியாயமும் வழங்குகிற நிலையில் இன்றைக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக அரசு பட்டியலின, பழங்குடியின மக்களின் மீது எந்தளவிற்கு அக்கறையோடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனால், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஆதிதிராவிடர் நலனில் அக்கறையில்லாத அரசு என்ற குற்றம் சாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட காழ்ப்புணர்ச்சி செயலாகும். பா.ஜ.க. என்றாலே ஆதி திராவிடர்களுக்கு எதிரான கட்சி என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனை பாதுகாத்திட தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல வாரியம் என்கிற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்கி "சமத்துவம் காண்போம்" என்ற முழக்கத்திற்கு செயல் வடிவம் கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பாக மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News