உள்ளூர் செய்திகள்

மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-11-01 09:17 GMT   |   Update On 2022-11-01 09:17 GMT
  • தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
  • சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

சீர்காழி:

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்–கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டு–வரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது.

இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது.

இதனால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் சவுடு நிறைந்து இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட இந்த லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகிறது.

நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணில் சறுக்கி விழுந்து அடுத்தடுத்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News