பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குரங்குகள் சிக்கின- குடியிருப்பு வாசிகள் நிம்மதி
- குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
- கூண்டில் 19 குரங்குகள் சிக்கின.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி, புதுக்காடு உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குணா குகைக்கு வந்த சுற்றுலா பயணியிடம் இருந்து பையை பறித்து அதில் இருந்த பணத்தை சூறை விட்ட சம்பவமும் நடந்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குரங்குகள் தொல்லையால் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக குரங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவை நடமாடும் பகுதியில் கூண்டுகளை வைத்தனர். இந்த கூண்டில் 19 குரங்குகள் சிக்கின. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஆகிய இடங்களிலும் குரங்குகள் நடமாட்டம் உள்ளதால் இவற்றை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.