உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயர சிற்பக்கலைத் தூண்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2022-07-27 17:03 GMT   |   Update On 2022-07-27 17:03 GMT
  • சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
  • கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக "கைவினை சுற்றுலா கிராமம்" என்ற திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய "சிற்பக்கலைத் தூண்" அமைக்கப்பட்டுள்ளது. கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகைப் புரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பக்கலைத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன், மதிவேந்தன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News